Pages

Tuesday 14 August 2018

வெங்காயமும் கண்ணீரும்

ஒரு ஊரில்  மூன்று நண்பர்கள் இருந்தனர். அவர்களில் ஒன்றின் பெயர் வெங்காயம், ஒன்றின் பெயர் முட்டை, இன்னொன்றின் பெயர் தக்காளி. அவர்கள் மூவருக்கும் ஒரு பெரிய ஆசை. அதுதான் கடலை பார்க்க வேண்டும் என்று.

ஒரு நாள் அவர்கள் மூவரும் கடலை பார்க்க கிளம்பினர். அதற்கு அவர்கள் வெகு தூரம் நடந்துச் செல்ல வேண்டியிருந்தது. அவர்கள் விளையாடி கொண்டே செல்லும் போது தக்காளியானது நடு ரோட்டில் நடந்து வந்தது. அப்போது அங்கு வந்த வாகனத்தில் பட்டு தக்காளி நசுங்கி இறந்து போனது.

வெங்காயமும், முட்டையும் அழுது கொண்டே நடந்து வந்தன. அவர்கள் கடலை பார்க்க ஒரு மலையை கடக்க வேண்டியிருந்தது. மலையில் நடந்தபோது முட்டையின் கால் சறுக்கி மலையிலிருந்து கீழே விழுந்து நொறுங்கி இறந்து போனது.

வெங்காயம் தனிமையாக அழுதுகொண்டே நடந்து சென்றது. கடைசியாக கடலை அடைந்தது. அங்கே தனிமையில் உட்கார்ந்து அழுதுகொண்டே இருந்தது. அதனால் அழுகையை அடக்க முடியவில்லை.

வெங்காயத்தின் அழுகை சத்தம் கேட்ட கடலின் தேவதை அங்கே வந்தது. அது வெங்காயத்திடம் அழுகைக்கான காரணம் கேட்க, வெங்காயமோ நடந்த அத்தனையையும் கூறியது.

வெங்காயமும் கண்ணீரும்
வெங்காயமும் கண்ணீரும்


என் நண்பர்கள் இருவரையும் நான் இழந்துவிட்டேன். என் நண்பனான தக்காளி இறந்த போது அழுவதற்கு என் நண்பன் முட்டையும் என்னுடன் இருந்தான். என் நண்பன் முட்டை இறந்த போது அழுவதற்கு நான் இருக்கிறேன். ஆனால், நான் இறந்தால் அழுவதற்கு எனக்கு யாரும் இல்லையே என்று அழுதபடியே கூறியது.

உடனே, கடலின் தேவதை நீ அழாதே! நான் உனக்கு ஒரு வரம் தருகிறேன் என்றது. வெங்காயமும் ஆச்சர்யத்துடன் என்ன என கேட்டது.  "நீ சாகும் போது உன் அருகில் இருப்பவர்கள் அனைவரும் அழுவார்கள்" என வரம் கொடுத்தது தேவதை. வெங்காயமும் மிகவும் மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு திரும்பியது.

அதனால் தான் நாம் வெங்காயம் வெட்டும் போது நமக்கு கண்ணீர் வருகிறது. தெரிந்து கொண்டீர்களா குட்டீஸ்!!!

No comments:

Post a Comment