Pages

Wednesday 24 April 2019

புத்தாண்டு கொண்டாட்டம்

இன்னும் ஒரு நாள் தான் இருந்தது புத்தாண்டு பிறப்பதற்கு, சத்யாவிற்கு மிகவும் வருத்தமாக இருந்தது. காரணம் இதுதான், அவள் உடன் படிக்கும் அவளது தோழிகள் புத்தாண்டு கொண்டாடும் விதத்தையும், அவர்களது புத்தாடைகளை பற்றியும் கூறியதுதான்.

நம் வீட்டில் இந்த மாதிரி எதுவும் இல்லையே என்ற வருத்தம்தான் சத்யாவிற்கு. சத்யாவின் வீட்டில் இவள் ஒரே பெண் என்றாலும், இவளை படிக்க வைப்பதே அவர்களுக்கு கஷ்டம் தான். நன்கு படிக்கும் பெண் என்பதால் அவர்கள் படிப்பிற்கு  தடைச் சொன்னதில்லை.

அவள் தந்தை வீட்டிற்குள் வரும்போதே சத்யாவின் முகத்தை பார்த்து விட்டார். அவர் ஒரு பணக்கார வீட்டின் கார் ஓட்டுநர். அவரது சம்பளம் வீட்டு செலவுக்கே சரியாக இருக்கும்.

அவர் என்ன என வினவியபோது, சத்யா தோழிகள் கூறிய  அனைத்தையும் கூறினாள். அவள் முகத்தில் மிகுந்த ஏக்கம் தெரிந்தது. தோழிகளால் கிண்டலுக்கு உள்ளாக நேரிடும் என்பதையும் தாண்டி, நம்மால் கொண்டாட முடியவில்லையே என்ற வருத்தம் அவளுக்கு.

ஆனால், அவளது தந்தை மிகவும் பொறுமையாக பதில் கூறினார். நீ உன்னுடைய தோழிகளை போல மாறவேண்டும் என எண்ணுகிறாய், ஆனால் அது நம் குடும்ப சூழ்நிலைக்கு ஒத்துவராது.

உனக்கு இப்போதுள்ள படிப்பு மட்டுமே வருங்காலத்தில் வரும் புத்தாண்டுகளை மகிழ்ச்சி உள்ளதாக மாற்றும். இன்று கஷ்டப்பட்டு படித்தால் நாளை இவ்வாறு கவலைப்பட வேண்டி இருக்காது  என கூறினார்.

அவர் என்னதான் சமாதானம் கூறினாலும் அவள் மனதில் ஒரு ஏக்கம் இருக்கத்தான் செய்தது. இருந்தாலும் அவளால் என்ன செய்ய முடியும் படிக்க தொடங்கினாள்.

அன்று இரவு, முதலாளி வீட்டிலிருந்து அழைப்பு வந்தது. உடனடியாக அவளது தந்தை பணிக்கு கிளம்பினார். அவர் திரும்பி வந்த போது அந்த காரின் பின்புற இருக்கையில் ஒரு கைப்பை இருந்தது. என்னவென்று பார்த்த அவருக்கு அதிர்ச்சி!!! கட்டு கட்டாக அதனுள் பணம் இருந்தது. நிச்சயம் இது முதலாளியின் பணமாகத்தான் இருக்க வேண்டும் என்று அவருக்கு தெரியும். அவரிடம் கொடுப்பதற்காக  முதலாளி வீட்டிற்கு திரும்பி சென்றார்.

அங்கே பணத்தை தொலைத்துவிட்டு அங்கும் இங்கும் தேடி கொண்டிருந்தனர். இவரையும் கைப்பையையும் கண்டதும் மகிழ்ச்சியுடன் முதலாளி ஓடிவந்தார். புத்தாண்டு வெகுமதியாக நிறுவன ஊழியர்களுக்கு  கொடுக்க வேண்டிய பணம் என்று கூறி நன்றி தெரிவித்தார்.

பணத்தை எடுக்காமல் திருப்பி கொடுத்தமைக்காக அவருக்கு ஐந்தாயிரம் பணமும் இனிப்பும் கொடுத்தார். சத்யாவின் தந்தை வீட்டிற்கு வரும் போது புத்தாடைகளோடு வந்தார். சத்யாவிற்கு மகிழ்ச்சியில் இரவிலேயே புத்தாண்டு கொண்டாட்டம் தொடக்கி விட்டது.


"நேர்மைக்கு என்றும் மதிப்பு உண்டு இல்லையா" குட்டிஸ்!!!