Pages

Monday 20 August 2018

கெடுவான் கேடு நினைப்பான்

ஓர் சிற்றூரில் அபிரா, கபிர் என்ற இரு நண்பர்கள் இருந்தனர். அவர்கள் இருவரும் சிறு வயது முதலே நண்பர்கள் மற்றும் விவசாயமும் செய்து வந்தனர். அவர்களுக்கு தனித்தனியே விவசாயம் செய்ய இடம் இருந்தது. அவர்களில் கபிர் மிகவும் பொறாமை குணமுடையவனாக இருந்தான்.

அபிராவின் மனைவி அவனை போலவே மிகவும் நல்லவளாகவும், இரக்க குணமுடையவளாகவும் இருந்தாள். ஒரு நாள் அபிரா அவனது தோட்டத்தில் வேலை செய்வதற்காக சென்றான். மத்தியான நேரம், எங்கிருந்தோ ஒரு குருவி காலில் அடிபட்டு ரத்தம் வழிய தோட்டத்திற்குள் வந்து விழுந்தது.

அபிரா அந்த குருவியை எடுத்து பச்சிலைகளை பறித்து அவனது துணியை கிழித்து கட்டுப்போட்டு வீட்டுக்கு கொண்டு வந்தான். அவனது மனைவியும் அந்த குருவிக்கு மருந்து போட்டு உணவு கொடுத்து ஒரு வாரம் நன்றாக பார்த்து கொண்டாள். ஒரு வாரத்திற்கு பின் அந்த குருவி காணாமல் போனது. சில நாட்கள் கழித்து அந்த குருவி திரும்பி வந்து, இரண்டு பூசணி விதைகளை அபிராவின் கைகளில் கொடுத்துவிட்டு பறந்து சென்றது. 

அவன் அதை மனைவியிடம் கொடுத்து நட்டு வைக்க சொன்னான். அவளும் அதை வீட்டின் முன்பக்கம் நட்டு தண்ணீர் ஊற்றி வைத்தாள். அடுத்த நாள் விழித்து பார்த்த போது இரண்டு பூசணி கொடிகளும் வளர்ந்து காய் காய்த்திருந்தது. அவர்களுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. அது ஏதோ அதிசய குருவிதான் என்று நினைத்துக்கொண்டனர்.

அடுத்தநாள் வீட்டின் சமையலுக்காக ஒரு பூசணிக்காயை பறித்து வெட்டினான் அபிரா. என்ன ஒரு ஆச்சர்யம்! உள்ளே அனைத்தும் தங்க நாணயங்களாக இருந்தன. அவன் அடுத்த பூசணிக்காயையும் பறித்து வெட்டினான். அதில் அனைத்தும் வைரங்களாக இருந்தன. அவர்களால் நடந்தவற்றை நம்பமுடியவில்லை.

அபிரா அந்த பணத்தை கொண்டு அவனது விவசாய நிலங்களின் எணிக்கையை பெருக்கினான் மேலும் அவனது வீட்டையும் பெரியதாக கட்டினான். மிகவும் கடுமையாக அவனது நிலங்களில் உழைத்தான். ஆனால் எல்லோரிடமும் மிகவும் எளிமையாகவே நடந்து கொண்டான். அதனால் அந்த ஊரின் பணக்காரர்களில் வரிசையில் ஒருவனாக அபிரா மாறினான். அபிராவின் திடீர் வளர்ச்சியை கண்ட கபிர் நண்பனிடம் நடந்ததை கேட்டு தெரிந்துகொண்டான்.

கபிர் பொறாமையோடு தோட்டத்திற்கு சென்றான், அந்த குருவி அங்கும் பறந்து வந்தது. அவன் அந்தக்குருவியின் காலை பிடித்து உடைத்து அதற்கு பச்சிலைகளை பறித்து கட்டு போட்டு வீட்டிற்கு கொண்டு வந்தான். அவனது மனைவி குருவிக்கு ஒரு வேளை மட்டும் சில நெல் மணிகளை கொடுத்து மருந்தும் போட்டாள். குருவியும் ஒரு வாரத்தில் காணாமல் போனது.

ஒருவாரம் கழித்து குருவி பறந்து வந்து இரண்டு பூசணி விதைகளை கபிரின் கைகளில் கொடுத்து விட்டு சென்றது. அவனும் ஆர்வத்தோடு அதனை வீட்டின் முன்னால் நட்டு வைத்தான். இரவு அவனுக்கு தூக்கமே வரவில்லை, வீட்டிற்குள் அங்கும் இங்கும் நடந்தான். காலையில் அவசர அவசரமாக வெளியே வந்து பார்த்தான். அங்கு இரண்டு பூசணிக் காய்கள் காய்த்திருந்தன.

கபிர் அக்காய்களை அவசரமாக பறித்து வெட்டினான். என்ன ஒரு ஆச்சர்யம்! அதனுள் இருந்து கொடிய விஷ பூச்சிகள் வீடு முழுவதும் பரவின. அவனையும் அவனது மனைவியையும் கொட்டி தீர்த்தன. வலி பொறுக்க முடியாமல் கபிரும் மனைவியும் கத்தினர். 

அபிராவும் அவனது மனைவியும் ஓடி சென்று பார்த்தனர். அவர்கள் நடந்தத்தை புரிந்து கொண்டனர். அவர்கள் இருவரையும் அந்த ஊரின் வைத்தியரிடம் கொண்டு சேர்த்து காப்பாற்றினர்.

"கெடுவான் கேடு நினைப்பான்" என்பது பழமொழி-யல்லவா குட்டிஸ்.

Friday 17 August 2018

நெருப்பு கோழியை காப்பாற்றிய நண்பர்கள்

ஒரு அடர்ந்த காட்டில் முள்ளம்பன்றியும், முயலும், நெருப்பு கோழி ஒன்றும் நண்பர்களாக இருந்தன. அவைகள் பக்கத்திலிருந்த அருவியில் சேர்ந்து குளித்து விட்டு, தினமும் அருவி ஓரங்களில் விளையாடும்.

அன்றும் அது போல அங்கிருந்த பூக்களையும், பழங்களையும் பறித்து சாப்பிட்டும் விளையாடிக்கொண்டும் இருந்தன. அப்போது அங்கே ஒரு பெரிய சத்தம் எங்கிருந்தோ கேட்டது. அதை கேட்ட எல்லா மிருகங்களும் பயந்து ஓடின. நண்பர்களான முள்ளம்பன்றியும், முயலும் ஓடின. ஆனால், நெருப்பு கோழி மட்டும் பக்கத்திலிருந்த ஒரு மரத்தின் பொந்திற்குள் தலையை நுழைத்துக் கொண்டு நிற்றது.

நண்பர்களுக்கு எப்படி நெருப்புக்கோழியை காப்பாற்றுவது என்று தெரியவில்லை. ஏனென்றால், பக்கத்திலிருந்த மலையிலிருந்து கற்கள் உருண்டு ஓடி வந்து கொண்டிருந்தன. 

நெருப்பு கோழியை நண்பர்கள் எவ்வளவு சத்தமாக அழைத்தும் அசையவில்லை. அதுக்கு உலகமே இருண்டு விட்டது என்ற நினைப்பு, நெருப்புக்கோழிகளின் குணாதிசயம் அது. 

என்னசெய்வது நெருப்புக்கோழியை  விட்டுச்செல்ல நண்பர்களுக்கு மனமில்லை. கடைசியாக ஒரு சிறிய கல்லை எடுத்து நெருப்புக்கோழியின் மேல் எறிந்தன. நெருப்பு கோழி தலையை திருப்பி பார்த்தபோது கற்கள் உருண்டுவந்து கொண்டிருந்தன. 

அவ்ளோதான் நெருப்புக்கோழியும், நண்பர்களும் ஓடத் துவங்கினர். ஒருவழியாக தப்பித்துக்கொண்டனர். மிகவும் மதிநுட்பமாக செயல்பட்டு தன்னை காப்பாற்றிய நன்பர்களுக்கு நெருப்புக்கோழி நன்றி கூறியது. நண்பர்களுக்குள் எதுக்கு நன்றி என்றன முள்ளம்பன்றியும், முயலும். மீண்டும் நண்பர்கள் மூவரும் காட்டிற்குள் சந்தோசமாக விளையாடி மகிழ்ந்தனர். 

Tuesday 14 August 2018

வெங்காயமும் கண்ணீரும்

ஒரு ஊரில்  மூன்று நண்பர்கள் இருந்தனர். அவர்களில் ஒன்றின் பெயர் வெங்காயம், ஒன்றின் பெயர் முட்டை, இன்னொன்றின் பெயர் தக்காளி. அவர்கள் மூவருக்கும் ஒரு பெரிய ஆசை. அதுதான் கடலை பார்க்க வேண்டும் என்று.

ஒரு நாள் அவர்கள் மூவரும் கடலை பார்க்க கிளம்பினர். அதற்கு அவர்கள் வெகு தூரம் நடந்துச் செல்ல வேண்டியிருந்தது. அவர்கள் விளையாடி கொண்டே செல்லும் போது தக்காளியானது நடு ரோட்டில் நடந்து வந்தது. அப்போது அங்கு வந்த வாகனத்தில் பட்டு தக்காளி நசுங்கி இறந்து போனது.

வெங்காயமும், முட்டையும் அழுது கொண்டே நடந்து வந்தன. அவர்கள் கடலை பார்க்க ஒரு மலையை கடக்க வேண்டியிருந்தது. மலையில் நடந்தபோது முட்டையின் கால் சறுக்கி மலையிலிருந்து கீழே விழுந்து நொறுங்கி இறந்து போனது.

வெங்காயம் தனிமையாக அழுதுகொண்டே நடந்து சென்றது. கடைசியாக கடலை அடைந்தது. அங்கே தனிமையில் உட்கார்ந்து அழுதுகொண்டே இருந்தது. அதனால் அழுகையை அடக்க முடியவில்லை.

வெங்காயத்தின் அழுகை சத்தம் கேட்ட கடலின் தேவதை அங்கே வந்தது. அது வெங்காயத்திடம் அழுகைக்கான காரணம் கேட்க, வெங்காயமோ நடந்த அத்தனையையும் கூறியது.

வெங்காயமும் கண்ணீரும்
வெங்காயமும் கண்ணீரும்


என் நண்பர்கள் இருவரையும் நான் இழந்துவிட்டேன். என் நண்பனான தக்காளி இறந்த போது அழுவதற்கு என் நண்பன் முட்டையும் என்னுடன் இருந்தான். என் நண்பன் முட்டை இறந்த போது அழுவதற்கு நான் இருக்கிறேன். ஆனால், நான் இறந்தால் அழுவதற்கு எனக்கு யாரும் இல்லையே என்று அழுதபடியே கூறியது.

உடனே, கடலின் தேவதை நீ அழாதே! நான் உனக்கு ஒரு வரம் தருகிறேன் என்றது. வெங்காயமும் ஆச்சர்யத்துடன் என்ன என கேட்டது.  "நீ சாகும் போது உன் அருகில் இருப்பவர்கள் அனைவரும் அழுவார்கள்" என வரம் கொடுத்தது தேவதை. வெங்காயமும் மிகவும் மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு திரும்பியது.

அதனால் தான் நாம் வெங்காயம் வெட்டும் போது நமக்கு கண்ணீர் வருகிறது. தெரிந்து கொண்டீர்களா குட்டீஸ்!!!

Friday 10 August 2018

வண்ண தொப்பி வியாபாரி

   சோலாப்புரி  என்ற சிற்றூரில் ஒரு தொப்பி வியாபாரி இருந்தார். அவரிடம் அதிகமான வண்ணங்களில் அழகழகான தொப்பிகள் இருந்தன. அவர் அன்று பக்கத்துக்கு ஊரான சித்தூரில் தொப்பிகள் விற்க செல்வதற்காக புறப்பட்டார். அவர் சித்தூரிற்கு செல்ல சமர்வன காட்டை கடந்து செல்ல வேண்டி இருந்தது. 

   வியாபாரி தொப்பி இருந்தப்  பெட்டியை தலையில் தூக்கி வைத்து நடக்க தொடங்கினார். அவர் காட்டின் பாதி தூரம் வந்த போது அவருக்கு களைப்பாக இருக்கவே, ஓய்வெடுக்க ஒரு மரத்தடியில் பெட்டியை வைத்து விட்டு சற்று கண்ணயர்ந்தார். தூக்கம் கலைந்து எழுந்தபோது அவரது பெட்டி காலியாக இருந்தது, அதிலிருந்த வண்ண தொப்பிகளை காணவில்லை.

   அவருக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. வியாபாரி தொப்பியை யார் எடுத்தது என்று அக்கம் பக்கம் தேடினார். அங்கு யாரையும் காணவில்லை , காடே அமைதியாக இருந்தது. அந்த சமயத்தில் மரத்தின் மேலிருந்து அவரது தலை மேலே ஒரு பழம் வந்து விழுந்தது. அவர் வலி பொறுக்கமுடியாமல், ஆ! என கத்தியவாறே சட்டென மேலே பார்த்தார்.


வண்ண தொப்பி வியாபாரி
வண்ண தொப்பி வியாபாரி


   என்ன ஒரு ஆச்சர்யம்! அங்கே எல்லா கிளைகளிலும் குரங்குகள் அவரது வண்ண தொப்பிகளை தலையில் வைத்துக்கொண்டு கிளைக்கு கிளை தாவியபடி விளையாடிக்கொண்டு இருந்தன. சிறிது நேரம் அப்படியே ஆச்சர்யப்பட்டு நிற்றுவிட்டார். அந்த நேரத்தில் எல்லா குரங்குகளும் அவரையே பார்த்து கொண்டிருந்தன.

   அவருக்கு என்ன செய்வதென்றே தெரியாமல், கையை மேலே தூக்கினார். உடனே எல்லா குரங்குகளும் கையை மேலே தூக்கின. வியாபாரி மெதுவாக  கையை இறக்கி மூக்கை தொட்டார். உடனே எல்லா குரங்குகளும் மூக்கை தொட்டன. 

  வியாபாரிக்கு ஒரு எண்ணம் தோன்றியது, அவரது தலையில் இருந்த தொப்பியை எடுத்து கீழே போட்டார். உடனே எல்லா முட்டாள் குரங்குகளும் தலையில் இருந்த தொப்பியை எடுத்து கீழே போட்டன. போட்டதுதான் தாமதம் வியாபாரி எல்லா தொப்பிகளை அவசரமாக எடுத்து பெட்டியில் போட்டுகொண்டு அந்த இடத்தை விட்டு ஓடினார். 

   அதன் பிறகு, அவர்  அந்த சமர்வன காட்டு பக்கம்  வந்தால் எவ்வளவு களைப்பாக  இருந்தாலும் தூங்குவதே இல்லை. அவருக்கு அந்த பழைய நினைவுகளே மனதில் வந்து போயின.

Thursday 9 August 2018

மிலி-யும் காட்டின் தேவதையும்



   அந்த ஊரின் மிக பெரிய வீடு அது. அது அந்த ஊரின் எல்லையில் இருந்தது. பக்கத்திலேயே கொடிய மிருகங்கள் வசிக்கும் பெரிய காடும் இருந்தது. அந்த வீட்டில் இரண்டு குழந்தைகள். பெரியவள் மிலி, அவளுக்கு ஒன்பது வயது மற்றும் அவள் தம்பி மித்ரன், அவனுக்கு ஏழு வயது. மிலி மிகவும் பிடிவாதமானவள். ஆனால் அவளும் தம்பியும் ஒற்றுமையாக விளையாடுவார்கள்.

   ஒரு நாள் அவள் தன் தந்தையிடம் விளையாட்டு பொம்மை ஓன்று வாங்கி கேட்டு அடம் பிடித்தாள். ஆனால் அவள் தந்தை இன்று முடியாது,  இன்னொரு நாள் வாங்கி தருகிறேன் என்றார். அதனால் மிலி தந்தையிடம் கோபித்து கொண்டு வீட்டை விட்டு காட்டு பகுதிக்கு  நடந்தாள். அவள் நடந்து வந்ததில் காட்டின் நடு பகுதிக்கே வந்து விட்டாள். நேரமும் இருட்டி விட்டது. அவளுக்கு மெல்ல பயம் உண்டாயிற்று. என்ன செய்ய முடியும், அங்கே பக்கத்தில் இருந்த ஒரு குகையில் தங்கி கொண்டாள். இரவு நேரம், அவளுக்கு தூக்கம் வரவில்லை, அங்கே கேட்கும் சத்தத்தையே கவனித்து கொண்டிருந்தாள். 

  அப்போது குகை பக்கமாக வந்த ஒரு கரடி சத்தமிட்டு கொண்டே சென்றது. அதை கேட்டதும் மிலி-க்கு வேர்த்துவிட்டது. அவள் மிகவும் பயத்துடன் கடவுளை வேண்டி கொண்டிருந்தாள். இன்று இரவு மட்டும் கழிந்து விட்டால் நாளை எப்படியாவது வீட்டிற்கு சென்று விட வேண்டும் என்று எண்ணினாள். கடவுளே! என்னை காப்பாற்று ! என்று அவளது மனது சொல்லிக்கொண்டே இருந்தது. 

மிலி-யும் காட்டின் தேவதையும்
மிலி-யும் காட்டின் தேவதையும்

   அப்போது அங்கே ஒரு பெரிய வெளிச்சம் தோன்றியது. அவள் ஒரு கொடிய மிருகம் தன்னை தாக்க வருவதாகவே நினைத்து பயந்தாள். ஆனால் அங்கே அவளின் அழுகுரல் கேட்டு தோன்றியது,  அந்த காட்டின் தேவதை. பக்கத்தில் வந்ததும் உன் பெயர் என்ன, நீ எப்படி இங்கு வந்தாய் என்று கேட்டது அந்த தேவதை. மிலி-க்கு அப்போது தான் கொஞ்சம் தைரியம் வந்தது. அவள் நடந்தவற்றை கூறினாள். அந்த தேவதை அவளுக்கு சாப்பிட தேவையான பழங்களை எல்லாம் கொண்டு வந்து கொடுத்தது. அந்தப் பழங்களை உண்டதும் அவளது பசி நீங்கியது. ஆனாலும் அவள் அழுது கொண்டே இருந்தாள். 

   தேவதை, நீ ஏன் அழுது கொண்டிருக்கிறாய் என்று கேட்டது. அதற்கு மிலி,  நான் வீட்டை விட்டு வந்திருக்க கூடாது. நான் எனது தந்தை கூறியதை கேட்காமல் வந்துவிட்டேன். எனக்கு என் தம்பியையும் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது என்றாள். 

   அதற்கு அந்த காட்டின் தேவதை, நீ அழாதே! நான் உன்னை உன்னுடைய வீட்டிற்கு அழைத்து செல்கிறேன். ஆனால் இன்னொரு முறை இந்த தவறை செய்யாதே என்றது. சரி என்று அவள் சொல்லி முடித்தாள். அதற்குள் அவளது தந்தை மிலி-யை தேடி அங்கு வந்து விட்டார். 

   உடனே அந்த தேவதை நான் கூறியவற்றை மறந்து விடாதே!  என்றவாறு, என் நினைவாக இதை வைத்து கொள் என்று கூறி அவளை தேவதை போல் அலங்கரித்து விட்டு அவள் கேட்ட பொம்மையையும் கொடுத்து விட்டு சென்றுவிட்டது. மிலி தேவதைக்கு நன்றி கூறினாள்.

  மிலி நடந்தவற்றை தந்தையிடம் கூறி மன்னிப்பும் கேட்டாள். மிலியின் தந்தை அவர்களை வீட்டுக்கு அழைத்து வந்தார். அன்றிலிருந்து மிலி-யின் பிடிவாத குணம் முற்றிலுமாக அழிந்து போயிருந்தது. அவள் மிகவும் ஒழுக்கமான குழந்தையாக மாறியிருந்தாள். அவளது தம்பியுடன் சந்தோசமாக விளையாடினாள்.

Wednesday 8 August 2018

சரக்கு ரயில் வண்டி பயணம்

சரக்கு ரயில் வண்டி பயணம்
சரக்கு ரயில் வண்டி பயணம்


   ஒரு சரக்கு ரயில் வண்டி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட தயாராக இருந்தது. அந்த ரயில் வண்டி அடர்ந்த காட்டு பகுதி வழியாக செல்ல வேண்டும். அந்த வண்டியில் ஐந்து பெட்டிகள் இருந்தன. அதில் ஆப்பிள், ஆரஞ்சு, திராட்ச்சை, கொய்யா, ஸ்ட்ராபெரி  போன்ற பழங்கள் இருந்தன.


   அந்த வண்டி சென்று கொண்டிருக்கும் போது குறுக்கே ஒரு மரம் விழுந்து கிடந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் ஓட்டுநர் தவித்த போது அங்கே பக்கத்து காட்டிலிருந்து இரண்டு யானைகள் வந்து மரத்தை தூக்கி போட்டன. ஓட்டுநர் அந்த யானைகளுக்கு நன்றி கூறினார்.

   மீண்டும் அந்த வண்டி காட்டுப்  பாதை வழியாக போய்க் கொண்டிருந்த  போது ஒரு புலி குறுக்கே வந்தது. ஓட்டுநர் பயந்து போய்  வண்டியை நிறுத்தி விட்டு ஒளிந்து கொண்டார். புலி வந்து பார்த்த போது எல்லாமே பழங்களாக இருந்தது. புலி மாமிசம் மட்டுமே உண்ணும் என்பதால், சீ சீ அனைத்தும் பழங்களாக இருக்கிறதே என்று கூறிவிட்டு சென்றுவிட்டது. 

  மீண்டும் ஓட்டுநர் ரயில் வண்டியை இயக்கினார். அவர் புலியை கண்டு பயந்ததில் தவறான பாதையில் ரயில் வண்டியை கொண்டு வந்து விட்டார். என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தார் ஓட்டுநர்.

   அப்போது அங்கே  இரண்டு ஒட்டக சிவிங்கிகள் வந்தன. அவைகள் மிகவும் உயரமாக இருந்ததால், அவைகளுக்கு மரங்களுக்கு மேலே எல்லா இடங்களும் தெரிந்தன. அவைகள் அவருக்கு வழிகாட்டின. ஓட்டுனரும் சரியான வழியில் ரயில் நிலையத்திற்கு வந்து பழங்களை இறக்கிவிட்டார். மிக்க மகிழ்ச்சி கொண்டு மிருகங்களுக்கு நன்றி கூறினார்.