Pages

Monday 20 August 2018

கெடுவான் கேடு நினைப்பான்

ஓர் சிற்றூரில் அபிரா, கபிர் என்ற இரு நண்பர்கள் இருந்தனர். அவர்கள் இருவரும் சிறு வயது முதலே நண்பர்கள் மற்றும் விவசாயமும் செய்து வந்தனர். அவர்களுக்கு தனித்தனியே விவசாயம் செய்ய இடம் இருந்தது. அவர்களில் கபிர் மிகவும் பொறாமை குணமுடையவனாக இருந்தான்.

அபிராவின் மனைவி அவனை போலவே மிகவும் நல்லவளாகவும், இரக்க குணமுடையவளாகவும் இருந்தாள். ஒரு நாள் அபிரா அவனது தோட்டத்தில் வேலை செய்வதற்காக சென்றான். மத்தியான நேரம், எங்கிருந்தோ ஒரு குருவி காலில் அடிபட்டு ரத்தம் வழிய தோட்டத்திற்குள் வந்து விழுந்தது.

அபிரா அந்த குருவியை எடுத்து பச்சிலைகளை பறித்து அவனது துணியை கிழித்து கட்டுப்போட்டு வீட்டுக்கு கொண்டு வந்தான். அவனது மனைவியும் அந்த குருவிக்கு மருந்து போட்டு உணவு கொடுத்து ஒரு வாரம் நன்றாக பார்த்து கொண்டாள். ஒரு வாரத்திற்கு பின் அந்த குருவி காணாமல் போனது. சில நாட்கள் கழித்து அந்த குருவி திரும்பி வந்து, இரண்டு பூசணி விதைகளை அபிராவின் கைகளில் கொடுத்துவிட்டு பறந்து சென்றது. 

அவன் அதை மனைவியிடம் கொடுத்து நட்டு வைக்க சொன்னான். அவளும் அதை வீட்டின் முன்பக்கம் நட்டு தண்ணீர் ஊற்றி வைத்தாள். அடுத்த நாள் விழித்து பார்த்த போது இரண்டு பூசணி கொடிகளும் வளர்ந்து காய் காய்த்திருந்தது. அவர்களுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. அது ஏதோ அதிசய குருவிதான் என்று நினைத்துக்கொண்டனர்.

அடுத்தநாள் வீட்டின் சமையலுக்காக ஒரு பூசணிக்காயை பறித்து வெட்டினான் அபிரா. என்ன ஒரு ஆச்சர்யம்! உள்ளே அனைத்தும் தங்க நாணயங்களாக இருந்தன. அவன் அடுத்த பூசணிக்காயையும் பறித்து வெட்டினான். அதில் அனைத்தும் வைரங்களாக இருந்தன. அவர்களால் நடந்தவற்றை நம்பமுடியவில்லை.

அபிரா அந்த பணத்தை கொண்டு அவனது விவசாய நிலங்களின் எணிக்கையை பெருக்கினான் மேலும் அவனது வீட்டையும் பெரியதாக கட்டினான். மிகவும் கடுமையாக அவனது நிலங்களில் உழைத்தான். ஆனால் எல்லோரிடமும் மிகவும் எளிமையாகவே நடந்து கொண்டான். அதனால் அந்த ஊரின் பணக்காரர்களில் வரிசையில் ஒருவனாக அபிரா மாறினான். அபிராவின் திடீர் வளர்ச்சியை கண்ட கபிர் நண்பனிடம் நடந்ததை கேட்டு தெரிந்துகொண்டான்.

கபிர் பொறாமையோடு தோட்டத்திற்கு சென்றான், அந்த குருவி அங்கும் பறந்து வந்தது. அவன் அந்தக்குருவியின் காலை பிடித்து உடைத்து அதற்கு பச்சிலைகளை பறித்து கட்டு போட்டு வீட்டிற்கு கொண்டு வந்தான். அவனது மனைவி குருவிக்கு ஒரு வேளை மட்டும் சில நெல் மணிகளை கொடுத்து மருந்தும் போட்டாள். குருவியும் ஒரு வாரத்தில் காணாமல் போனது.

ஒருவாரம் கழித்து குருவி பறந்து வந்து இரண்டு பூசணி விதைகளை கபிரின் கைகளில் கொடுத்து விட்டு சென்றது. அவனும் ஆர்வத்தோடு அதனை வீட்டின் முன்னால் நட்டு வைத்தான். இரவு அவனுக்கு தூக்கமே வரவில்லை, வீட்டிற்குள் அங்கும் இங்கும் நடந்தான். காலையில் அவசர அவசரமாக வெளியே வந்து பார்த்தான். அங்கு இரண்டு பூசணிக் காய்கள் காய்த்திருந்தன.

கபிர் அக்காய்களை அவசரமாக பறித்து வெட்டினான். என்ன ஒரு ஆச்சர்யம்! அதனுள் இருந்து கொடிய விஷ பூச்சிகள் வீடு முழுவதும் பரவின. அவனையும் அவனது மனைவியையும் கொட்டி தீர்த்தன. வலி பொறுக்க முடியாமல் கபிரும் மனைவியும் கத்தினர். 

அபிராவும் அவனது மனைவியும் ஓடி சென்று பார்த்தனர். அவர்கள் நடந்தத்தை புரிந்து கொண்டனர். அவர்கள் இருவரையும் அந்த ஊரின் வைத்தியரிடம் கொண்டு சேர்த்து காப்பாற்றினர்.

"கெடுவான் கேடு நினைப்பான்" என்பது பழமொழி-யல்லவா குட்டிஸ்.

No comments:

Post a Comment